உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கு.க., செய்த பெண் பலி; அரசு மருத்துவர்களை கண்டித்து உறவினர்கள் சாலைமறியல்

கு.க., செய்த பெண் பலி; அரசு மருத்துவர்களை கண்டித்து உறவினர்கள் சாலைமறியல்

பெ.நா.பாளையம்: ஆத்துார் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் இறந்ததால், அவரது உறவினர்கள், மருத்துவர்களை கண்டித்து, பெத்தநாயக்கன்பாளையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த பனைமடலை சேர்ந்த, லாரி டிரைவர் முருகன். அவரது மனைவி செல்லம், 35. இவர்களுக்கு, 4 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த, 14 இரவு, 7:00 மணிக்கு ஆத்துார் அரசு மருத்துவமனையில், 5வதாக ஆண் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவமாக பிறந்த நிலையில் நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு ஆத்துார் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்ய, செல்லம் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் செய்யப்பட்டது.அப்போது ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு நேற்று காலை, 7:00 மணிக்கு உயிரிழந்தார். உடல் பரிசோதனை செய்யாமல் தவறான முறையில் அறுவை சிகிச்சை மூலம் குடும்ப கட்டுப்பாடு செய்ததுதான், செல்லம் உயிரிழக்க காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள், பெத்தநாயக்கன்பாளையம் அருகே, பனைமடலில், கருமந்துறை - ஏத்தாப்பூர் நெடுஞ்சாலையில், நேற்று மதியம், 1:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.அப்போது சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், செல்லம் குடும்பத்துக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோரி, 50க்கும் மேற்பட்டோர் வலியுறுத்தினர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் பேச்சு நடத்தினார். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் கூறினார். இதனால் உறவினர்கள், 4:30 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் மாற்று வழியில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி