மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
இடைப்பாடி, இடைப்பாடி நகராட்சி வணிக வளாகத்தில், மின்சார மீட்டர் பெட்டி மீது, காய்கறி மூட்டை மோதியதில் கூலி தொழிலாளி இறந்தார்.இடைப்பாடி, நைனாம்பட்டியை சேர்ந்தவர் ரவி, 42. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இவர் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதால் இவரது மனைவி, 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்றுள்ளார். இதனால் ரவி, தன் அண்ணன் வீட்டில் இருந்து வந்தார். இவர் நேற்று காலை, 8:30 மணிக்கு இடைப்பாடி நகராட்சியின் வணிக வளாகத்தில் இருந்து, காய்கறி மூட்டைகளை துாக்கி சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கடைகளுக்கு, மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள மின்சார மீட்டர் இருந்த பெட்டி மீது, காய்கறி மூட்டை மோதியுள்ளது. அப்போது மின்சாரம் தாக்கியதில், ரவி சம்பவ இடத்திலேயே இறந்தார். இடைப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.