84,476 பேர் ரசித்த மலர் காட்சி ஏற்காடு கோடை விழா நிறைவு
ஏற்காடு :ஏற்காட்டில், 48-வது கோடை விழா, மலர் காட்சி, கடந்த, 23ல் தொடங்கப்பட்டது. கடைசி நாளான நேற்று வரை, ஏராளமான சுற்றுலா பயணியர் கண்டுகளித்தனர். பல்வேறு துறைகளின் சார்பில் சுற்றுலா பயணியர், மக்கள், குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க, பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன. முக்கியமாக அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சியை, 74,146 பெரியவர்கள், 10,330 சிறியவர்கள் என, 84,476 பேர் ரசித்தனர். அதேபோல் ரோஜா தோட்டம் - 11,470 பேர், தாவரவியல் பூங்கா 1 - 1,642 பேர், தாவரவியல் பூங்கா 2 - 7,328 பேர், ஏரி பூங்கா - 4,450 பேர், ஐந்திணை பூங்காவில், 5,654 பேர் என, மொத்தம், 1,15,020 பேர் சுற்றிப்பார்த்துள்ளனர். நேற்று மாலை, ஏற்காடு ஒன்றிய கலையரங்கில், கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நிறைவு விழா நடந்தது.இதில் விழாவை ஏற்பாடு செய்து ஒருங்கிணைந்து பணியாற்றிய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள், சுற்றுலா, போலீஸ், தீயணைப்பு, நெடுஞ்சாலை, மருத்துவம், மாநகராட்சி, டவுன் பஞ்சாயத்துகள், நகராட்சிகள், தமிழக அரசு போக்குவரத்துக்கழகம், வட்டார போக்குவரத்து உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள், சுகாதாரப்பணிகளை முழுவீச்சில் மேற்கொண்ட துாய்மை பணியாளர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.தொடர்ந்து புகைப்படம், மாடித்தோட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பொன்மணி, சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா, தோட்டக்கலை, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.