திருக்கோஷ்டியூர் புறவழிச்சாலையில் அறிவிப்பு பலகை இல்லாததால் விபத்து
திருக்கோஷ்டியூர், : திருக்கோஷ்டியூரில் தேசிய நெடுஞ்சாலையில் பட்டமங்கலம் ரோடு சந்திக்கும் இடத்தில் போக்குவரத்து அறிவிப்புபலகை இல்லாததால் விபத்து நடக்கிறது.திருமயம் -- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலை திருக்கோஷ்டியூருக்கு வெளியே செல்கிறது.திருப்புத்துாரிலிருந்து திருக்கோஷ்டியூர் அருகே புறவழிச்சாலை துவங்கும் இடத்தில் இடது புறம் பட்டமங்கலத்திற்கு ரோடு பிரிகிறது. வலது புறமாக திருக்கோஷ்டியூரில் நுழைவதற்கு ரோடு பிரிகிறது. அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இரு புறமும் ரோடுகள் விலக்கு ரோடுகளாக செல்கின்றன.ஆனால் அதற்கான போக்குவரத்து குறியீடு எதுவும் அப்பகுதியில் இல்லை. ஒரு புற விலக்கு ரோடு உள்ள அறிவிப்பு பலகை மட்டுமே உள்ளது. வளைவான அப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. விபத்து பகுதி என்று மட்டும் அறிவிப்பு பலகை உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் விபத்து அபாயம் அதிகமாக காணப்படுகிறது.தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அந்த இடத்தில் ஆய்வு செய்து சரியான குறியீடுகளை தேவையான இடங்களில் நிறுவ வேண்டும். மேலும் ஊர்களின் விபரங்களை தெரிவிக்கும் அறிவிப்பு பலகைகளையும் அப்பகுதியில் கூடுதலான இடங்களில் பொருத்த வேண்டியது அவசியமாகும்.