| ADDED : ஜூன் 08, 2024 05:30 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் குறைந்த வாடகைக்கு வேளாண் கருவிகள் வழங்கப்படுகிறது என கூட்டுறவு இணை பதிவாளர் கே.ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகிறது. இச்சங்கங்களை பல்நோக்கு சேவை மையமாக மாற்றி அமைக்கும் திட்டத்தின் கீழ் 30 டிராக்டர், 22 ரொட்டோவேட்டர்கள் மற்றும் 28 இயந்திர கலப்பைகள் மற்றும் 6 டிரைலர்கள் உட்பட வேளாண்மை உபகரணங்கள் கொள்முதல் செய்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு உள்ளன.சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம், சாக்கோட்டை, திருப்புத்துார், கல்லல், தேவகோட்டை வட்டாரங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களை தொடர்பு கொண்டு, விவசாயிகள் குறைந்த வாடகையில் வேளாண் கருவிகளை பெற்று பயன்பெறலாம்.விவசாயத்தில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதிக வாடகைக்கு தனியாரை நாட வேண்டியுள்ளது. இது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையாக உள்ளது. இதனை தவிர்க்கவே கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள்வழங்கப்படுகிறது. மேலும் விபரத்திற்கு 63821 01300 எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.