உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்; செப்., 6ல் தேரோட்டம்

பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்; செப்., 6ல் தேரோட்டம்

பிள்ளையார்பட்டி: சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், செப்.,6ல் தேரோட்டமும், செப்.,7ல் சதுர்த்தி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் பூர்வாங்க பூஜைகள் நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு மூஷிக கொடிபடம், சண்டிகேஸ்வரர் கோவிலை வலம் வந்து, கொடி மரம் எழுந்தருளினர்.தொடர்ந்து, உற்ஸவ கற்பக விநாயகர், அங்குசத்தேவர் கொடி மரம் எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் நடந்தன. யாகசாலை புனித நீர் மற்றும் திரவியங்களால் கொடிமரம், அஸ்திரதேவருக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. காலை 11:57 மணி அளவில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி ராம.மெய்யப்ப செட்டியார், பூலாங்குறிச்சி சுப.முத்துராமன் செட்டியார் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து பிச்சைக்குருக்கள், சோமசுந்தரம் குருக்கள், ஸ்ரீதர் குருக்கள் ஆகியோரால் கொடிமரம், கொடிபடத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. இரவில், மூஷிக வாகனத்தில் உற்ஸவ விநாயகர் திருவீதி வலம் வந்தார்.இன்று காலை முதல் எட்டாம் நாள் வரை, காலை, 9:30 மணிக்கு வெள்ளிக்கேடகத்தில் விநாயகர் புறப்பாடும், இரவில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், யானை, மயில், குதிரை வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். செப்.,3 மாலையில் கஜமுகசூரசம்ஹாரம், செப்.,6 மாலையில் தேரோட்டமும் நடைபெறும். அன்றைய தினம், ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தை பக்தர்கள் மாலை 4:30 மணி முதல், இரவு 10:30 மணி வரை தரிசிக்கலாம். செப்.,7ல் கோவில் குளத்தில் காலையில் தீர்த்தவாரி, மதியம் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையல், இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி