| ADDED : ஜூன் 13, 2024 02:40 AM
சிவகங்கை:உள்ளே சென்று பார்க்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசிய சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையை சிவகங்கை காங்., எம்.பி., கார்த்தி கடந்து சென்று ஆய்வு செய்தார். சிவகங்கை எம்.பி., கார்த்தி நேற்று சிவகங்கை பஸ் ஸ்டாண்டை ஆய்வு செய்தார். கழிப்பறை பகுதிக்கு வந்தபோது கடும் துர்நாற்றம் வீசியது. அதன் உள்ளே செல்லாமல் கடந்துசென்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது: சிவகங்கை பஸ் ஸ்டாண்டை மேம்படுத்த ஆய்வு செய்தேன். கழிப்பறை, பயணிகள் தங்குமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்ய முயற்சிக்கப்படும். எம்.பி., நிதி மட்டும் போதாது. அரசுத்துறை நிதியையும் பெற்று மேம்பாட்டு பணி முடிக்கப்படும்.ரயில்வே தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளில் 49 கோரிக்கைகள் அளித்தேன். அதே அமைச்சர் தான் தற்போதும் ரயில்வே துறைக்கு பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆட்சியின் போது அளிக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறுமா என்பது சந்தேகம் தான். பொதுசிவில் சட்டம், குடியுரிமைச்சட்டம் கொண்டு வருவதற்கு பா.ஜ.,வின் கூட்டணி கட்சிகள் ஆதரவளிப்பார்களா என்று தெரியாது. நாங்கள் எதிர்ப்போம். கூட்டணியில் இருந்தாலும் தங்களது கட்சியை வளர்க்க ஆலோசனை செய்வது இயற்கை தான். அதற்கு ஒவ்வொரு கட்சிகளுக்கும் உரிமை இருக்கிறது என்றார்.முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், நகராட்சி தலைவர் துரைஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க., நிர்வாகி வாக்குவாதம்
பஸ் ஸ்டாண்டில் ஆய்வின்போது எம்.பி.,யுடன் தி.மு.க., பிரமுகர் குமாரசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 'முதல்வர் ஸ்டாலின் கூறியதால் தான் உங்களுக்கு ஓட்டு போட்டோம். சிவகங்கை நாறிக் கிடக்கிறது. உங்களுக்கு வாக்களித்து என்ன பயன்' என சரமாரியாக கேள்வி எழுப்பியதால் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.