உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஒற்றுமைக்கான திருவிழா 5 ஆயிரம் பேருக்கு விருந்து

ஒற்றுமைக்கான திருவிழா 5 ஆயிரம் பேருக்கு விருந்து

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள வேலங்குடியில் பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் உறவுகளின் ஒற்றுமையை வலியுறுத்தி 75 ஆடுகள், 50 கோழி பலியிட்டு5 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.கோட்டையூர் அருகே உள்ள வேலங்குடியில் மூட்டாவூரணி காளி அம்மன், பதினெட்டாம்படி கருப்பர் கோயில் உள்ளது. நேற்று முன்தினம், மாசிமக மகேஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று, 75 ஆடுகள், 50 கோழிகள் பலியிட்டு5 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து நடந்தது. 30 ஆண்டுகளாக உறவுகள் ஒற்றுமை நீடித்து இருக்கவும், பாரம்பரியமாக இத்திருவிழாவை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கிலும் திருவிழா நடைபெறுகிறது. அப்பகுதி மக்கள் கூறுகையில்:30 ஆண்டுகளாக இந்திருவிழா கொண்டாடப்படுகிறது. மாசி மகேஸ்வர பூஜை அன்று, வேலங்குடியில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு சந்தனக்குடம் எடுத்து வருவர். பின்பு சிறப்பு பூஜை நடைபெறும். அன்று அனைவருக்கும் சைவ விருந்து நடைபெறும். மறுநாள், நேர்த்திக்கடன் செலுத்துவோர் ஆடுகளை கொண்டு வருவர். திருமணமாகி சென்ற பிறந்து விட்டு பெண்கள் கோழி, சேவல் கொண்டு வருவர். சாமிக்கு பலியிட்டு அசைவ விருந்து தயார் செய்யப்படும். அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும், அடுத்த தலைமுறைக்கு இந்த பாரம்பரிய திருவிழாவை கொண்டு செல்லும் நோக்கிலும் விழா நடைபெறுகிறது. விழா முடிந்ததும், அனைவரும் அமர்ந்து குறை, நிறைகளை பேசி சரி செய்வோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !