கூட்டுறவு சங்கத்தில் போலி நகை அடகு முன்னாள் தலைவர் புகார்
காரைக்குடி: சாக்கோட்டை அருகே உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகை அடகு வைத்து மோசடி செய்தவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் புகார் எழுப்பியுள்ளார்.இது சம்பந்தமாக தனி அதிகாரி நியமிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.முன்னாள் தலைவர் பாண்டி கூறுகையில்: சாக்கோட்டை அருகேயுள்ள சித்திவயலில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்படுகிறது. இங்கு, போலி நகைகளை அடகு வைத்து ரூ. 1.28 லட்சம் வரை மோசடி நடந்துள்ளது.இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் உட்பட பலருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.துணைப்பதிவாளர் செந்தில்குமார் கூறுகையில்: போலி நகை மோசடி குறித்து புகார் வந்துள்ளது. தனி அதிகாரி மூலம் விசாரணை நடந்து வருகிறது. உரிய ஆதாரங்கள் கிடைத்ததும் முறையான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.