மானாமதுரையில் அரசுக் கல்லுாரி: பட்ஜெட் அறிவிப்பால் மகிழ்ச்சி
மானாமதுரை: மானாமதுரையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி புதிதாக துவங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து மானாமதுரை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இல்லாத காரணத்தினால் இப்பகுதி மாணவர்கள் 20 கி.மீ.,துாரமுள்ள சிவகங்கை, இளையான்குடிக்கு செல்ல வேண்டியிருந்தது. நீண்ட காலமாக இங்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி சட்டமன்ற கூட்டத் தொடரில் மானாமதுரையில் கல்லூரி துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் நேற்று நடந்த பட்ஜெட் தாக்கலில் மானாமதுரையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.மானாமதுரை பால் நல்லதுரை கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை பகுதி ஏராளமான கிராமங்களை கொண்டது.இப்பகுதி மாணவர்கள் உயர்கல்விக்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலை இருந்ததால் ஏராளமான மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு சென்று வருகின்றனர். நேற்று அறிவிப்பு வெளியானதால் மகிழ்ச்சியில் உள்ளோம் என்றார்.தொண்டு நிறுவன கல்வி ஆராய்ச்சியாளர் பாண்டி: மானாமதுரையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இல்லாத காரணத்தினால் இப்பகுதி மாணவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வெளியூர்களுக்கு சென்று படித்து வருகின்றனர். நேற்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது வெறும் அறிவிப்போடு நின்று விடாமல் உடனடியாக நிதி ஒதுக்கி கல்லூரியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எம்.எல்.ஏ., தமிழரசி கூறியதாவது: மானாமதுரையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டுமென்று முதல்வரிடமும், அமைச்சர்களிடமும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததோடு மட்டுமில்லாமல் சட்டமன்ற கூட்டத்தொடர்களிலும் பேசி வந்தேன்.இதன் பலனாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.