அரசு ஊழியர், ஆசிரியர் தற்செயல் விடுப்பு பள்ளி, அலுவலகங்கள் வெறிச்
சிவகங்கை,: பழைய பென்ஷன் திட்டத்தை ரத்து செய் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பினர் (ஜாக்டோ - ஜியோ) நடத்திய தற்செயல் விடுப்பு போராட்டத்தால் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சம்பள முரண்பாட்டை களைய வேண்டும்.பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை 243 யை ரத்து செய்ய வேண்டும்.சத்துணவு, அங்கன்வாடி, நுாலகர், துாய்மை பணியாளர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், சகாயதைனேஷ் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், ராம்குமார் முன்னிலை வகித்தனர்.மாநில உயர்மட்ட குழு சேதுசெல்வம் துவக்கி வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டியன், கோவிந்தராஜ், தயானந்தன், ராஜா, கண்ணதாசன், மனோகர், மலைராஜ், ரவி, தமிழரசன், பீட்டர், ராமராஜன், கணேஷ், டேவிட் அந்தோணிராஜ், ஜெயபிரகாஷ் பேசினர்.தற்செயல் விடுப்பு மற்றும் தர்ணா போராட்டத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் மாவட்ட அளவில் 2,500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ், டி.எஸ்.பி., அமல அட்வின், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் 761 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர், கல்வித்துறை ஊழியர்கள், வருவாய் உட்பட பிற துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பில் ஈடுபட்டனர்.இதனால் வருவாய், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்ட அளவில் 17 பள்ளிகள் ஆசிரியர்களின்றி மூடப்பட்டன. பெரும்பாலான பள்ளிகளை தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்களை கொண்டு மாணவர்களை கண்காணித்தனர்.
3113 பேர் தற்செயல் விடுப்பு
சிவகங்கை மாவட்ட வருவாய்த்துறையில் பணிபுரியும் 1491 பேரில், 520 பேர், 761 அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர் என 4800 பேரில் 2186 பேர், வளர்ச்சி துறையில் பணிபுரியும் 407 பேர்களில் 189 பேர் உட்பட 7542 பேரில் 3,113 பேர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.