உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆந்திராவில் தேங்காய் விளைச்சல் பாதிப்பு தமிழக தேங்காய் விலை கடும் உயர்வு

ஆந்திராவில் தேங்காய் விளைச்சல் பாதிப்பு தமிழக தேங்காய் விலை கடும் உயர்வு

திருப்புவனம்: ஆந்திர மாநிலத்தில் தேங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதால் தமிழக தேங்காய்களின் விலை உயர்ந்து வருகிறது.தமிழகத்தில் திருப்புவனம், சோழவந்தான், கம்பம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. இப்பகுதியில் இருந்து தேங்காய், மட்டை, விசிறி, தட்டி உள்ளிட்டவை பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.மற்ற பகுதி தேங்காய்களை விட திருப்புவனம் பகுதி தேங்காய்க்கு வெளி மாநிலங்களில் வரவேற்பு உண்டு.திருப்புவனம் பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் கோடவுன் அமைத்து விவசாயிகளிடம் இருந்து தேங்காய்களை வாங்கி அதனை உறித்து மகாராஷ்டிரா, குஜராத், உத்ரகாண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். ஒரு கன ரக லாரியில் 30 ஆயிரம் தேங்காய் வரை ஏற்றலாம். திருப்புவனம் பகுதியில் இருந்து நான்கு நாட்களுக்கு ஒரு முறை வெளி மாநிலங்களுக்கு தேங்காய் அனுப்பப்பட்டு வந்தன. கடந்த சில மாதங்களாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் தேங்காய்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஒரு கிலோ 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 38 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தான் மற்ற மாநிலங்களுக்கு தேங்காய் அனுப்பப்படும், ஆந்திராவில் தேங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அப்பகுதி வியாபாரிகள் தமிழகத்தில் வந்து தேங்காய்களை வாங்கி அனுப்பி வருகின்றனர். இதனால் விலை உயர்ந்து வருகிறது. திருப்புவனம் புதுார் ஞானகணேஷ்பிரபு கூறுகையில்: பொதுவாக மழை காலங்களில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும், ஜூன், ஜூலையில் குரும்பை அதிகளவில் உதிர்ந்து விடுவதால் 100 மரங்களில் 50 மரங்களில் தான் விளைச்சல் இருக்கும்.இதனால் வரத்தும் வெகுவாக குறையும்.இந்தாண்டு ஆந்திராவில் தேங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அந்த பகுதி வியாபாரிகளும் இங்கு வந்து விட்டனர் இதனால் விலை உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு கோடவுனில் இருந்தும் தனித்தனியாக லாரிகளில் அனுப்பி வந்தோம், தட்டுப்பாடு காரணமாக அனைத்து கோடவுன்களில் இருந்து மொத்தமாக லாரிகளில் ஏற்றி அனுப்பி வருகிறோம்.மொத்த விலையில் ஒரு கிலோ 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 38 ரூபாயாக உயர்ந்து விட்டது. இன்னும் விலை உயர வாய்ப்புண்டு என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை