15,000 இலவச விவசாய மின் இணைப்பு மார்ச் 15க்குள் வழங்க அதிகாரிகளுக்கு கெடு
சிவகங்கை,:தமிழகத்தில் இலவச மின் இணைப்புகளை மார்ச் 15க்குள் வழங்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு கெடு விதிக்கப் பட்டுள்ளது.தமிழகத்தில் 50 சென்ட்-க்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல், வருவாய் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் மின்வாரியத்திற்கு ஆன்லைனில் இலவச மின்சாரம் கோரி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு மூப்பு அடிப்படையில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.2012--2013 ம் ஆண்டில் இருந்தே விவசாய நிலங்களுக்கு இலவச மின் இணைப்பு கோரி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 15,000 மின் இணைப்பு வரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. 2024--2025 ம் ஆண்டிற்கு 15,000 மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர். 2024--2025 ம் ஆண்டு மார்ச் 31 உடன் கடந்த ஆண்டிற்கான இலக்கை மின்வாரியம் எட்டியிருக்க வேண்டும். ஆனால், இது வரை 11,000 மின் இணைப்பு மட்டுமே வழங்கியுள்ளனர். எஞ்சிய 4000 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என மின்வாரிய தலைமை பொறியாளர், மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.விவசாயிகள் கூறியதாவது: ஏற்கனவே தமிழக அரசு ஆன்லைனில் பதிவு செய்த விவசாயிகளுக்கும், தட்கலில் பதிவு செய்துள்ள 50,000 விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு தர வேண்டும் என தெரிவித்துள்ளது. 2012-- 2013 ம் ஆண்டில் பதிவு செய்தவர்களுக்கு தற்போது வரை 11,000 மின் இணைப்பு மட்டுமே தந்துள்ளனர். இன்னும் 39,000 மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றனர்.