கல்லல் பழைய பாலம் அருகே வாரச்சந்தை அமைக்க எதிர்ப்பு
காரைக்குடி : கல்லல் பழைய பாலம் அருகே, புதிய வாரச்சந்தை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் சமரசம் செய்தனர்.கல்லல் ஊராட்சியில் வாரந்தோறும் வியாழக்கிழமை தெப்பக்குளம் பின்புறம் வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் வாரச்சந்தை செயல்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்தது. பல்வேறு இடங்களில் வாரச்சந்தை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.தற்போது கல்லல் காரைக்குடி நெடுஞ்சாலை பழைய பாலம் அருகே வாரச் சந்தை அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. நேற்று சந்தை நடைபெற இருந்த நிலையில் ஒரு தரப்பினர், புதிய சந்தைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சந்தைக்கு வந்த வியாபாரிகள் மற்றும் ஊர் மக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு வந்த தேவகோட்டை டி.எஸ்.பி., கவுதமன், தாசில்தார் ராஜா மற்றும் யூனியன் அதிகாரிகள் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த வாரம் மட்டும் பழைய இடத்திலேயே வாரச் சந்தை செயல்படும் என்றும், கலந்து ஆலோசித்து புதிய சந்தைக்கான இடம் தேர்வு செய்யப்படும் என்று கூறி அவர்களை சமாதானம் செய்தனர்.