செப். 5 ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்
சிவகங்கை: ரேஷன் கடைகளுக்கு உணவுப்பொருட்களை சரியான எடையில் பொட்டலமாக வழங்குவது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்., 5 ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய விற்பனையாளர்கள், எடையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 33,200 ரேஷன் கடைகள் மூலம் கார்டுதாரர்களுக்கு உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. உணவுப்பொருட்கள் எடை குறைவு தொடர்பாக ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், எடையாளர்கள் தினமும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இதனால் அரசே சரியான எடையில் தரமான உணவுப்பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும்.கார்டுதாரர்களுக்கு முழுமையாக 100 சதவீதம் உணவுப் பொருட்களை வழங்க ஒதுக்க வேண்டும். உரிய காலத்தில் ஒரே நேரத்தில் ரேஷன்கடைகளுக்கு உணவுப்பொருட்களை வழங்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு பொருட்களை இறக்கும் போது கட்டாய இறக்கு கூலி வசூலிப்பதை அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை விற்பனையாளர்கள், எடையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 5 ஒரு நாள் மாநிலம் தழுவிய அளவில் வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க மாநில பொது செயலாளர்கே.ஆர்.விஸ்வநாதன் கூறியதாவது: 3 மாதங்களுக்கும் மேலாக பாமாயில், துவரம்பருப்பு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண அரசு முன்வர வேண்டும். இதுபோன்று எடை குறைவு புகார்களை தவிர்க்க உணவுப்பொருட்களை பொட்டலமாக அரசே வழங்கினால் நல்லது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண கோரி செப்., 5 மாநிலத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் மூடி வேலை நிறுத்தம் செய்யவுள்ளோம் என்றார்.