பாதுகாப்பில்லாத குடிநீர் கிணறு
திருப்புவனம்: திருப்புவனம் அருகே வடகரையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் கிணறு பாதுகாப்பின்றி திறந்த வெளியில் இருப்பதால் குப்பை கொட்டப்பட்டு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்புவனம் வடகரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் மதுரை உள்ளிட்ட பகுதியில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். வடகரை பகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய விநாயகர் கோயில் அருகே திறந்த வெளி கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. கிணற்றின் மேற்பகுதியில் வெறும் இரும்பு கம்பிகள் மட்டும் பாதுகாப்பிற்கு அமைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட கம்பி வலை துருப்பிடித்து கிடக்கிறது. கிணறு திறந்த வெளியில் இருப்பதால் அப்பகுதி சிறுவர்கள் கிணற்றினுள் குப்பைகளை வீசி வருகின்றனர். மகேஸ்வரன் கூறியதாவது: பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் கிணற்றின் மேற்பகுதியில் வலை ஏற்படுத்தி குடிநீரை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. பாதுகாப்பில்லாத குடிநீரை குடிக்க வேண்டியுள்ளது என்றார்.