சிவகங்கை தெப்பக்குளம் வரத்துக்கால்வாயில் கழிவு: பசுமை தீர்ப்பாயம் எச்சரித்தும் நகராட்சி அலட்சியம் நிர்வாகம்
சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தெப்பக்குளத்திற்கு மழை நீர் செல்ல வரத்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக துார்வாரப்படாததால் கால்வாய்கள் அடைபட்டுள்ளன. தெப்பக்குளத்தின் வடக்கு பகுதியில் உள்ள வரத்து கால்வாயில் வணிக நிறுவனங்கள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தெப்பகுளத்தில் கலக்கிறது.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக கடந்த ஜன.1ஆம் தேதி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாளச்சாக்கடை செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்தும் சிவகங்கை தெப்பகுளத்தில் கழிவு நீர் கலப்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நகராட்சி, சிவகங்கை கலெக்டர், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.தெப்பகுளத்திற்கு வடக்குப்பகுதியில் வரும் வரத்துக்கால்வாயில் மீண்டும் மீண்டும் கழிவு நீர் விடப்படுகிறது. இந்த கழிவு நீர் முழுவதும் தெப்பகுளத்தில் தான் கலக்கிறது. தெப்பகுளத்தின் கிழக்கு பகுதியில் குப்பை கொட்டப்பட்டு நீர் முழுவதும் குப்பை தேங்கி இருக்கிறது.இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் வரத்துக்கால்வாயில் கழிவு நீர் விடும் நிறுவனம், வீடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.