27 கி.மீ., துாரத்தில் 35 வேகத்தடை: தவிக்கும் வாகன ஓட்டிகள்
திருப்புவனம்: திருப்புவனம் - மேலுார் வழித்தடத்தில் 35 வேகத்தடை இருப்பதால் வாகன ஓட்டிகள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர். திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை, திருச்சி, சிங்கம்புணரி செல்ல பூவந்தி, மேலுார் பாதையை அதிகம் பயன்படுத்துகின்றனர். திருப்புவனத்தில் இருந்து பூவந்தி வழியாக மேலுார் 27கி.மீ., துாரமாகும். மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலையை மேலுார், மானாமதுரை நெடுஞ்சாலைத்துறையினர் பராமரித்து வருகின்றனர். இந்த வழித்தடத்தில் சாலையை ஒட்டி பள்ளிகள், ஆரம்ப சுகாதார மையங்கள், கோயில்கள் உள்ளன. இந்த இடத்தில் விபத்துக்களை தவிர்ப்பதற்காக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊரிலும் குறைந்த பட்சம் இரண்டு முதல் ஐந்து வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடை பக்கவாட்டில் வாகனங்கள் ஒதுங்கி செல்ல கூடாது என கருதி முண்டுகற்களும் குவித்து வைக்கப்பட்டுள்ளன. வேகத்தடை தவிர பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. 27 கி.மீ.,துாரத்தை கடக்க சுமார் ஒரு மணி நேரம் செலவாகிறது. ஏற்கனவே 42 வேகத்தடை இருந்த நிலையில் வாகன ஓட்டிகளின் தொடர் புகார் காரணமாக ஏழு மட்டும் நீக்கப்பட்டன. நெடுஞ்சாலைத்துறையினர் இச்சாலையில் உள்ள வேகத்தடைகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க வேண்டும், பழுதடைந்த இடங்களை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.