73 சமூக நல விடுதிகள் மூடல்
சிவகங்கை: ஆதிதிராவிட மாணவர்களுக்காக மாநில அளவில் 1,331 சமூக நல விடுதிகள் செயல்படுகின்றன. மூன்று நேர உணவுடன், மாலையில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. மாணவர்கள் வருகையை உறுதிப்படுத்தும் நோக்கில் விடுதிகளில், டிஜிட்டல் வருகை பதிவேடு கடை பிடித்து வருகின்றனர். மாணவர்கள் வருகை குறைந்துள்ளதாக கூறி 73 சமூக நல விடுதிகள் மூடப்பட்டுள்ளன. மாநில ஆதிதிராவிடர் நல கண்காணிப்பு குழு கூட்டமைப்பு மாநில தலைவர் ஏ.பூமிநாதன் கூறியதாவது: மாணவர் எண்ணிக்கை குறைந்ததாக கூறி 73 விடுதிகளை மூடியுள்ளனர். இதனால் ஏழை ஆதிதிராவிட மாணவர்கள் பாதிக்கப்படுவர். மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க மாவட்ட அளவில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். மூடிய விடுதிகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஆதிதிராவிடர் நல கமிஷனர் ஆனந்திடம் புகார் செய்துள்ளேன் என்றார்.