திருப்பாச்சேத்தியில் எரியாத மின் விளக்கு
திருப்பாச்சேத்தி: மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில் திருப்பாசேத்தி முக்கிய சந்திப்பில் உயர் மின் கோபுர விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். மதுரையில் இருந்து பரமக்குடி வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது. கீழடி விலக்கு, சக்குடி விலக்கு, நரிக்குடி விலக்கு, வன்னிகோட்டை விலக்கு, முதுவந்திடல் விலக்கு உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் உயர் கோபுர மின் விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து நேரிட்டு உயிரிழப்பு நிகழ்ந்து வந்தன. இதனை தொடர்ந்து உயர் மின் கோபுர விளக்குகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்டு எரிகிறது. இதில் திருப்பாச்சேத்தி அருகே படமாத்துார் விலக்கில் உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் இன்று வரை விளக்கு எரியாமல், இருளில் மூழ்கி கிடக்கிறது. மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்: உயர் மின் கோபுர விளக்குகளுக்கான மின் இணைப்பிற்கு உரிய கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செலுத்தவில்லை. எனவே மின் இணைப்பு வழங்கப்படவில்லை, என்றனர்.