இரட்டை கொலையில் சிக்கியவர் கால்முறிவு
சிவகங்கை:சிவகங்கையில் இரட்டை கொலையில் கைது செய்யப்பட்டவர் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றார். ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து கால் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிவகங்கை வாணியங்குடியைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் மணிகண்டன் 40. ரவி மகன் அருண்குமார் 26, கணேசன் மகன் ஆதிராஜா 50. மூவரையும் தீபாவளியன்று கீழவாணியங்குடி நாடக மேடை அருகே டூவீலர்களில் வந்தவர்கள் வெட்டி விட்டு தப்பினர். இதில் மணிகண்டன் இறந்தார். அன்று இரவு 7:00 மணிக்கு களத்துாரை சேர்ந்த சிங்கம் மனைவி லட்சுமியை 60, ஒரு கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பியது. இரண்டு கொலையிலும் தொடர்புடையவர்களை போலீசார் தேடினர்.மணிகண்டன் கொலையில் தொடர்புடைய 7 பேரை நவ.4ல் போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இரண்டு கொலையிலும் தொடர்புடைய கீழக்குளம் தவம் என்ற முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்ய அவர் மறைத்து வைத்த இடமான ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பகுதிக்கு இன்ஸ்பெக்டர் அன்னராஜா தலைமையிலான போலீசார் அழைத்து சென்றனர்.அப்போது தவம் போலீசாரை தள்ளிவிட்டு ஓடினார். போலீசார் விரட்டியதில் கீழே விழுந்த தவத்திற்கு வலது கால் மற்றும் வலது கையில் முறிவு ஏற்பட்டது. அவரை பிடித்த போலீசார் அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் கூறியது: தீபாவளி அன்று கீழக்குளத்தில் உள்ள கண்மாயில் தவம் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது கிரிக்கெட் விளையாடுவதற்காக பந்து வாங்க அவரது நண்பர்கள் கீழவாணியங்குடியில் உள்ள கடைக்கு சென்றனர். அங்கு அவரது நண்பர்களுக்கும் மணிகண்டன் நண்பர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் மணிகண்டன் நண்பர்கள் தவத்தின் நண்பர்களை தாக்கியுள்ளனர்.காயம்பட்டவர்கள் தவத்திடம் கூறியதும் அங்கிருந்தவர்கள் ஆயுதங்களுடன் சென்று கீழவாணியங்குடியில் நாடகமேடை அருகே இருந்த மணிகண்டன், அருண்குமார், ஆதிராஜாவை வெட்டியுள்ளனர். இதில் மணிகண்டன் இறந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பித்தவர்கள் மீண்டும் கீழக்குளத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தவம் மட்டும் தனியாக சென்று வீட்டில் இருந்த லட்சுமி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தவத்திற்கும் லட்சுமி மகன் ஜெயபாண்டிக்கும் கோவையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு வழிப்பறி செய்த பணத்தை பிரிப்பதில் முன்பகை இருந்துள்ளது.ஜெயபாண்டி வெளிநாட்டில் இருப்பதால் அவரை வர வைப்பதற்காகவும் அவரின் மீது உள்ள கோபத்தாலும் லட்சுமியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு கூறினர்.