உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வடமாநிலத்தவருக்கு அரிவாள் வெட்டு மணலுாரில் கஞ்சா கும்பல் அட்டூழியம்

 வடமாநிலத்தவருக்கு அரிவாள் வெட்டு மணலுாரில் கஞ்சா கும்பல் அட்டூழியம்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலுாரில் நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதைக்காக வைகை ஆற்றுக்கு சென்ற வடமாநிலத்தவர்கள் மீது கஞ்சா கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணலுாரில் தனியார் நிறுவனம் பந்து தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதில் மணலுார், திருப்புவனம், மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 600 பேர், பீஹார், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இதில் பீஹார், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நிறுவனத்தின் பின்புறம் தங்கியுள்ளனர். அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க வைகை ஆற்றை ஒட்டிய கருவேல மரங்களுக்கு நடுவே உள்ள ஒற்றையடி பாதையை பயன்படுத்தி சென்று வருவது வழக்கம். இரவில் வெளியே வருபவர்களிடம் அடிக்கடி பணம் பறிப்பதால் நான்கு அல்லது ஐந்து பேர் இணைந்து வெளியே செல்வார்கள். நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுசிந்தா தேஹரி 20, மனுசோரன் 33, உள்ளிட்ட ஆறு பேர் இயற்கை உபாதைக்காக ஒற்றையடி பாதை வழியாக சென்றனர். நான்கு பேர் வைகை ஆற்றிற்குள் செல்ல இருவர் மட்டும் பாதையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த இருவர் அவர்களிடம் பணம், அலைபேசி கேட்டு மிரட்டினர். தர மறுக்கவே கையில் இருந்த அரிவாளால் இருவரையும் வெட்டினர், இருவரது சப்தம் கேட்டு மற்ற நான்கு பேரும் வரவே தாக்குதல் நடத்திய இருவரும் தப்பி விட்டனர். காயமடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை