உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி அருகே பெண் எஸ்.ஐ., மீது தாக்குதல் என பொய் குற்றச்சாட்டு

காரைக்குடி அருகே பெண் எஸ்.ஐ., மீது தாக்குதல் என பொய் குற்றச்சாட்டு

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பெண் எஸ்.ஐ.,பிரணிதாவை வி.சி.க., வடக்கு மாவட்ட செயலாளர் இளையகவுதமன் தாக்கியதாக புகார் எழுந்தது. பெண் எஸ்.ஐ., குற்றச்சாட்டு பொய் என மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.சோமநாதபுரம் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிரணிதா. பிப்.,5 ஸ்டேஷன் வந்த வி.சி.க., வடக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் தன்னை தாக்கியதாகவும், இதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் புகார் தெரிவித்தார். இதை இளைய கவுதமன் மறுத்திருந்தார். இதுதொடர்பாக நடந்த விசாரணைக்கு பிறகு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அதில் கூறியுள்ளதாவது: பிப்.5 அமராவதிபுதுாரில் உள்ள நிலத்தகராறு தொடர்பாக இரு பிரிவினர் சோமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக வந்தனர். எஸ்.ஐ., முத்து கிருஷ்ணன் விசாரித்தார். அப்போது ஸ்டேஷன் வந்த பிரணிதா முத்துகிருஷ்ணனின் விசாரணையில் தலையிட்டார். இதற்கு கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் பிரணிதாவிற்கும் இளைய கவுதமனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு கிராமத்தினர் கலைந்து சென்றனர். பிரணிதா தன்னை 10 பேர் தாக்கியதாக கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். ஸ்டேஷனில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன் மருத்துவமனையிலும் விசாரிக்கப்பட்டது. விசாரணையில் பெண் எஸ்.ஐ., தாக்கப்பட்டதாக கூறியது முற்றிலும் தவறானது. மிகைப்படுத்தப்பட்டது. மேலும் பெண் எஸ்.ஐ.,பொதுமக்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மீது வந்த குற்றச்சாட்டுகளால் நவ., 18 சிவகங்கைக்கு மாற்றப்பட்டார். ஆனால் பணி மாறுதல் செய்யப்பட்ட ஸ்டேஷனில் அறிக்கை தாக்கல் செய்யாமல் 48 நாட்கள் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். தொடர்ந்து சோமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனிலேயே பணிபுரிகிறார்.பெண்கள் மற்றும் பெண் போலீசுக்கு எதிரான குற்றங்களில் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டு பொய்யானது. இருப்பினும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை