ஆவின் பாலில் துர்நாற்றம்; அதிகாரிகள் சமாளிப்பு
காரைக்குடி : காரைக்குடியில் ஆவின் பாலில் துர்நாற்றம் வீசியது. சிவகங்கை மாவட்டத்தில் 75 சதவீதமும், ராமநாதபுரத்தில் 25 சதவீதமும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் மூலம் பால் விற்பனை செய்யப்படுகிறது.ஆரஞ்சு, வயலட் மற்றும் மஞ்சள் நிற பாக்கெட் என மூன்று நிறங்களில் வாடிக்கையாளர்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது. ஆரஞ்சு பாக்கெட் ஒரு லிட்டர் ரூ.60 அரை லிட்டர், ரூ.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வயலட் கலர் அரை லிட்டர் ரூ.22 , மஞ்சள் 200 மி.லி., ரூ. 9 விற்பனை செய்யப்படுகிறது. வயலட் நிறத்தில் வரும் அரை லிட்டர் பால் விரைவில் கெட்டுப் போவதாகவும், புளித்த வாடை வீசுவதாகவும் மக்கள் புகார் கூறி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தற்போது ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டிலும் துர்நாற்றம் வருவதாக மக்கள் புலம்புகின்றனர்.அதிகாரிகள் கூறுகையில், பாலில் துர்நாற்றம்வருவதாக புகார் எதுவும் வரவில்லை. பாலை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.