உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெல்வயலில் பாக்டீரியா இலை  கருகல் நோய் தடுக்க ஆலோசனை 

நெல்வயலில் பாக்டீரியா இலை  கருகல் நோய் தடுக்க ஆலோசனை 

சிவகங்கை: நெல் வயல்களில் பாக்டீரியா இலை கருகல் நோய் தாக்குதலை தடுக்க, வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் ஆலோசனை வழங்கியுள்ளார்.அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் 3 ஆயிரம் ஏக்கரில் கோடை பருவ நெல் சாகுபடி செய்துள்ளனர். சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், கல்லல், சாக்கோட்டை பகுதிகளில் 30 முதல் 80 நாள் பயிராக நெல் வளர்ந்துள்ளன.சாக்கோட்டை வட்டாரத்தில் நெல் வயல்களில் பாக்டீரிய இலை கருகல் நோய் தாக்குதலின் அறிகுறி இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து செட்டிநாடு வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் பாபு, வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) காளிமுத்து, வட்டார உதவி இயக்குனர் மங்கையர்கரசி நெல்வயல்களில் நேரடி கள ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வுபடி நெல்வயலில் அதிக தழைச்சத்து இடுவதை தவிர்க்கவும். தழைச்சத்தை (யூரியா) 3 அல்லது 4 முறைகளாக பிரித்து மேல் உரமாக இடலாம்.அளவுக்கு அதிகமாக தண்ணீர் பாய்ச்சக் கூடாது. நோய் தாக்குதல் குறைவாக இருப்பின், வேப்ப எண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் தெளிக்கலாம். நோய் தாக்குதல் சற்று அதிகமாக இருந்தால் ஏக்கருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்ளின் கலவை 18 கிராம் மற்றும் காப்பர் ஆக்கி குளோரைடு 250 கிராம் ஆகிய மருந்து கலவையை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும். அதிகமாக நோய் தாக்கம் இருப்பின் 15 நாள் இடைவெளிவிட்டு மறுமுறை தெளிக்கலாம்.சிவகங்கை மாவட்ட விவசாயிகள் இந்நடைமுறையை பின்பற்றி நெற்பயிரை நோய் தாக்குதலில் இருந்து காக்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை