நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதலை தடுக்க ஆலோசனை
சிவகங்கை : நெற்பயிரில் இலை சுருட்டு புழு தாக்குதல் வராமல் தடுக்க வேண்டும்என சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:மாவட்டத்தில் 1.95 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது 50 முதல் 70 நாள் பயிராக வளர்ந்துள்ளது. தற்போது நிலவும் பகல் நேர குறைந்த வெப்பநிலை மற்றும் மேகமூட்டத்துடன் குளிர்ந்த கால நிலை நிலவுவதால், பயிர்களில் இலை சுருட்டு புழு தாக்குதல் வர வாய்ப்பு உள்ளது. இப்புழு தாக்கினால் இலை நீளவாக்கில்மடிக்கப்பட்டு, பச்சை நிறத்தில் புழுக்கள் அதனுள் இருக்கும்.இலையின் பச்சை நிற திசுக்களை சுரண்டி வெண்மையாக மாறி காய்ந்து விடும். முழு அளவில் இலை சுருட்டுப்புழு தாக்கிய வயலில் நெற்பயிர்கள் அனைத்தும் வெளிர் நிறத்தில் காணப்படும். இதை கட்டுப்படுத்த வரப்புகளை களைச்செடியின்றி வைக்கவும். தழைச்சத்து உரத்தை ஒரே நேரத்தில் வயலில் இடாமல் மூன்று முறையாக பிரித்து இட வேண்டும். இரவில் வயலில் விளக்கு பொறி அமைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் வேப்பங்கொட்டை சாறு 3 சதவீதம் அல்லது அசாடிராக்டின் தெளிக்க வேண்டும். பூச்சி தாக்குதல் அதிகம் இருந்தால் ஏக்கருக்கு 30 மில்லி வீதம் புளுபெண்டமைடு அல்லது 250 மில்லி புரப்பனோபனோபாஸ், அல்லது 250 கிராம் கார்டாப்ைஹட்ரோ குளோரைடு தெளிப்பது போன்ற முறைகளை செயல்படுத்தி நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதலில் இருந்து தப்பிக்க செய்யலாம், என்றார்.