மானிய விலையில் வேளாண் கருவி
திருப்புவனம்: சம்பா பருவ நெல் சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் மானிய விலையில் கருவிகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். வடகிழக்கு பருவ மழையை நம்பி தமிழகத்தில் செப்டம்பரில் விவசாய பணிகள் தொடங்கப்படுகின்றன. பொங்கலுக்கு அறுவடை செய்யும் வகையில் என்.எல்.ஆர்., அண்ணா ஆர் 4, பொன்னி, ஆர்.என்.ஆர்., கோ 50, ஏ.எஸ்.டி., 19 போன்ற நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. உழவு பணி, களை வெட்டுதல், பரம்பு அடித்தல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு வேளாண் கருவிகள் தேவைப்படும். இதற்காக வேளாண் துறை பொறியியல் பிரிவில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கும் மற்ற சிறு குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும், விவசாய பணிகள் தொடங்கிய நிலையில் வேளாண் கருவிகள் கிடைக்காமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். நெல் நாற்று பறித்து நடவு செய்த விவசாயிகள் 45 நாட்கள் கழித்து பயிர்களுக்கு மருந்து தெளிப்பது வழக்கம், வேளாண் துறை சார்பில் கை ஸ்பிரேயர், மோட்டார் ஸ்பிரேயர், பேட்டரி ஸ்பிரேயர் உள்ளிட்டவைகள் வழங்கப்படும், கடந்த சில ஆண்டுகளாக தார்பாய், மண்வெட்டி, கடப்பாரை, ஸ்பிரேயர்கள் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் வாடகைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதே போல பவர் டில்லர் மானிய விலையில் தருவதாக கூறி சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளிடம் தனியார் நிறுவனம் ஒரு கோடி ரூபாய் வரை வசூலித்து விட்டு இரு வருடங்கள் கழித்தும் இன்று வரை வழங்கவில்லை. இதில் வேளாண் துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தாண்டாவது விவசாயிகளுக்கு விவசாய பணிகள் தொடங்கியுள்ள நிலையில் மானிய விலையில் கருவிகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.