உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெல் விவசாயத்திற்கு தரும் முக்கியத்துவத்தை மற்றவற்றிற்கு வேளாண் அதிகாரிகள் தருவதில்லை

நெல் விவசாயத்திற்கு தரும் முக்கியத்துவத்தை மற்றவற்றிற்கு வேளாண் அதிகாரிகள் தருவதில்லை

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் நெல் விவசாயத்திற்கு தரும் முக்கியத்துவத்தை மற்றவற்றிற்கு வேளாண் அதிகாரிகள் தருவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். வைகை ஆற்றுப்பாசனத்தை நம்பி திருப்புவனம் வட்டாரத்தில் நெல், வாழை, கரும்பு, தென்னை, கேழ்வரகு, கம்பு பயிரிடப்படுகிறது. வடகிழக்கு பருவமழையை நம்பி நெல் பயிரிடப்பட்டாலும் கிணற்று பாசனத்தை நம்பி வாழை, தென்னை, கரும்பு, மழையை நம்பி நிலக்கடலை, எள், உளுந்து பயிரிடப்படுகின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்கும் செப்டம்பரில் திருப்புவனம் வட்டாரத்தில் கோ 50, என்.எல்.ஆர்., ஆர்.என்.ஆர்., அட்சயா ஆர்4., உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. மார்ச், ஏப்ரலில் கோடை நெல் விவசாயமும் ஓரளவிற்கு அதிகரித்துள்ளது. 2017 -- 18ம் ஆண்டில் ஆயிரத்து 448 எக்டேரில் நெல் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்ட நிலையில் 2023 - 24ல் இரண்டாயிரத்து 290 எக்டேராக உயர்ந்தது. ஆனால் நிலக்கடலை சாகுபடி 2017 - 18ல் 104 எக்டேராக இருந்து 2023 - 24ல் 52 எக்டேராக குறைந்து விட்டது. 2017 - 18ல் 753 எக்டேரில் பயிரிடப்பட்ட கரும்பு 2023 - 24ல் 774 எக்டேர் அளவிலேயே பயிரிடப்பட்டுள்ளது. வாழை விவசாயமும் 2017 - 18ல் 291 எக்டேரில் இருந்து 2023 - 24 ல் 479 எக்டேர் அளவிலேயே உயர்ந்துள்ளது . ஒவ்வொரு வருடமும் மானிய விலையில் விதை நெல், யூரியா, உரம் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று வேளாண் துறை சார்பில் வழங்கப்படுகிறது. நெல் நடவு செய்த நிலையில் இருந்து அறுவடை வரை கண்காணிக்கப்படுகிறது. விவசாயிகளிடையே நெல் விவசாயம் தொடர்பான போட்டிகளும் நடத்தப்பட்டு அதிகபட்ச விளைச்சலை காட்டும் விவசாயிகளுக்கு பரிசும் வழங்கப்படுகின்றன. ஆனால் மற்ற விவசாயத்திற்கு எந்தவித உதவியும் வழங்கப்படுவதில்லை, போதிய கண்காணிப்பும் இருப்பதில்லை. திருப்புவனம் வட்டாரத்தில் செங்குளம், பறையன்குளம், முக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை அதிகம் பயிரிடப்படுகிறது. ஆனால் விதை நிலக்கடலை உரிய ஆலோசனை என எதுவுமே வழங்கப்படாததால் 50 சதவிகித நிலக்கடலை விவசாயம் குறைந்து விட்டது. வாழை விவசாயத்திலும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான எந்த முயற்சியையும் வேளாண் துறை, தோட்டக்கலை துறை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். திருப்புவனம் வட்டாரத்தில் பழையனுார், ஓடாத்துார், அச்சங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி, கத்தரி, வெண்டை உள்ளிட்டவை அதிகளவில் பயிரிடப்பட்டு வந்தன. சமீப காலமாக நெல் தவிர மற்ற விவசாயமே நடைபெறவில்லை. விவசாய நிலங்களில் தொடர்ந்து ஒரே வகை பயிரிடுவதால் மண்ணின் வளம் பாதிக்கப்படும், மாறி மாறி பயிரிடுவதால் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை