நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல் வேளாண் துறை ஆலோசனை
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க பூச்சி மருந்து தெளிக்க வேண்டும் என வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 1.95 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துஉள்ளனர். நெற்பயிர்கள் 70 முதல் 90 நாட்கள் வரை நன்கு விளைந்த பயிராகி விட்டது. பகல்நேர குறைந்த வெப்பம், குளிர்ந்த காலநிலை, இரவில் பனிப் பொழிவு காரணமாக நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புஉள்ளது.சிவகங்கை அருகே மாடக்கோட்டை, வேம்பங்குடி பகுதியில் இதன் தாக்கம் அதிகம் உள்ளது. இந்நோய் தாக்கியிருந்தால்வயலின் நீர் மட்டத்திற்கு மேல் பயிரின் அடிப்பகுதியில் இளங்குஞ்சுகள்,முதிர் பூச்சிகள் ஒட்டி கொண்டிருக்கும். பூச்சி தாக்கிய பயிர்கள்முற்றிலும் காய்ந்து, தீய்ந்தது போல் இருக்கும். வயல் முழுவதும் ஆங்காங்கே வட்ட வடிவில் கருகியது போல் காட்சி அளிக்கும். இதனை உரிய நேரத்தில் தடுக்காவிடில் 90 சதவீதம் வரை மகசூல் பாதிக்கப்படும். இந்நோயை கட்டுப்படுத்த வரப்புகளை களைசெடியின்றி சுத்தமாக வைக்க வேண்டும். தழைச்சத்து உரத்தை ஒரே நேரத்தில் இடாமல், 3 முறை பிரித்து இட வேண்டும். இரவில் வயலில் விளக்கு பொறி அமைத்து தாய் பூச்சிகளை அழிக்கலாம். பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 3 சதவீதம் அல்லது அசாடிராக்டின் 1000 பிபிஎம்.,மருந்தை ஒரு ஏக்கருக்கு 500 மில்லி அளவில் தெளிக்க வேண்டும். பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பின் ஏக்கருக்கு 120 கிராம் பைமெட்ரோசின் அல்லது 250 மில்லி பியூப்ரோபெசின் அல்லது 200 கிராம் அசிபேட், இமிடாகுளோபிரிட் மருந்து தெளிக்க வேண்டும். இம்முறைகளை விவசாயிகள் கையாண்டு நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும், என்றார்.