தேர்வுகளை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்
சிவகங்கை: தமிழகம் முழுவதும் 10, பிளஸ்2 பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வியில் 10,11, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் ஏப்.15 வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பொதுத் தேர்வு பணிகளை கண்காணிப்பதற்காக மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டைக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இணை இயக்குநர் பொன்னையா, ராமநாதபுரத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிகல்வி மாநில திட்ட இயக்கக இணை இயக்குநர் குமார், விருதுநகருக்கு அரசுத் தேர்வுகள் இயக்க இணை இயக்குநர் (பணியாளர்) மகேஸ்வரி, சிவகங்கைக்கு தனியார் பள்ளிகள் இயக்கம் இணை இயக்குநர் ராமகிருஷ்ணன் உட்பட 35 மாவட்டத்திற்கும் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.