உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாவட்ட அளவில் கொள்முதல் நிலையம் மூலம் 10,000 டன் நெல் கொள்முதல் விவசாயிகளுக்கு பணம் விடுவிக்க ஏற்பாடு

மாவட்ட அளவில் கொள்முதல் நிலையம் மூலம் 10,000 டன் நெல் கொள்முதல் விவசாயிகளுக்கு பணம் விடுவிக்க ஏற்பாடு

சிவகங்கை: மாவட்ட அளவில் 50 க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் மூலம் நேற்று வரை 10,000 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.மாவட்ட அளவில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவ மழை மூலம் அக்., முதல் டிச., வரை நல்ல மழை பெய்தது. ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, கண்மாய்கள் நிரம்பின. 1.95 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்து, தை துவக்கத்தில் இருந்து அறுவடை செய்து வருகின்றனர்.விவசாயிகள் அறுவடைசெய்த நெல்லை கொள்முதல் செய்ய நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 80 கொள்முதல் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, தற்போது வரை 50 க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை வாங்கி வருகின்றனர். இந்த நெல்லை வழங்கும் விவசாயிகளுக்கு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நெல்லுக்கான தொகை வழங்கப்பட்டு வருகின்றன.

10,000 டன் நெல் கொள்முதல்

முதல் மற்றும் சன்னரகம் என பிரித்து நெல்லை வாங்கி வருகின்றனர். 50 க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் மூலம் 1,0000 டன் வரை விவசாயிகளிடம் இருந்து நெல் மூடைகளை பெற்றுள்ளனர். இன்னும் நெல் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.விவசாயிகள் முழுவதுமாக நெல்லை அறுவடை செய்து முடிக்கும் வரை கொள்முதல் நிலையம் மூலம் நெல்லை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர். அதே நேரம் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வழங்கிய விவசாயிகளுக்கு அதற்கான தொகையை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ