ஏ.டி.எம்., கார்டை மாற்றி மோசடி
திருப்புவனம் : திருப்புவனத்தில் ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க வருபவர்களிடம் போலி கார்டுகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த பத்திற்கும் மேற்பட்ட கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்புவனத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்கள் செயல்பட்டு வருகின்றன. முதியோர்கள், பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்து தருவதாக ஆசை காட்டி போலி கார்டுகளை மாற்றி கொடுத்து பணத்தை திருடி வருகின்றனர். திருப்புவனத்தில் நேற்று முன்தினம் ஆவரங்காட்டைச் சேர்ந்த முத்துகுமரன் 36, பணம் எடுக்க ஏ.டி.எம்.,மிற்கு சென்ற போது பணம் வரவில்லை. அருகில் நின்றிருந்த நபர் பணம் எடுத்து தருவதாக கார்டை வாங்கி பணம் எடுத்து வேறு வங்கி கார்டை கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். சுதாரித்த முத்துகுமரன் நண்பர்களுடன் சந்தேகப்படும்படியான நபரை தேடிய போது வேறு ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க நின்றிருந்ததை கண்டு அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள புகையிலைப்பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் 29, என தெரியவந்தது. அவரிடம் இருந்த பத்திற்கும் மேற்பட்ட போலி கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்து ரிமாண்டிற்கு அனுப்பினர்.