பிடிக்க முயன்ற எஸ்.ஐ.,யை வெட்ட முயற்சி: ரவுடி கால் முறிந்தது
சிவகங்கை: சிவகங்கையில் வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ., வைரமணியை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி தனசேகரன் 37, கால் முறிந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிவகங்கை அருகே சாமியார்பட்டியில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், எஸ்.ஐ., வைரமணி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் சென்ற காரை வழிமறித்தனர். கார் நிற்காமல் சென்றது. போலீசார் தொடர்ந்து அந்த காரை விரட்டி சென்றனர்.வைரவன்பட்டி அருகே உப்பாற்று பாலத்தில் கார் மோதி நின்றது. காருக்குள் இருந்த ரவுடி தனசேகரன் அரிவாளால் எஸ்.ஐ.,யை வெட்ட முயன்றார். மேலும் போலீசாரிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் பாலத்திலிருந்து குதித்ததில் அவரது கால் முறிவு ஏற்பட்டது. அவரை மதுரை அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் வழக்கு உட்பட 9 வழக்குகள் உள்ளன. மேலும் இவர் போலீசிடம் சிக்காமல் இருக்க சிம்கார்டு இல்லாத அலைபேசி மூலம் மோடத்தின் வழியாக பேசி வந்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.