உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மார்கழி கோலத்தில் விழிப்புணர்வு வாசகம்

மார்கழி கோலத்தில் விழிப்புணர்வு வாசகம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் பெண் ஆசிரியர் மார்கழி கோலத்தில் பயனுள்ள வாசகங்களை எழுதி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.சிங்கம்புணரி எஸ்.எஸ். நகரை சேர்ந்தவர் கீதா முத்துப்பாண்டியன். அரசுப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஒவ்வொரு வருடமும் மார்கழி முழுவதும் தனது வீட்டு வாசலில் வண்ணக்கோலத்துடன் தினமும் ஒரு பயனுள்ள வாசகங்களையும் எழுதி வருகிறார். இந்த வாசகங்களை அவ்வழியாக செல்பவர்கள், குறிப்பாக மாணவர்கள் நின்று வாசித்து செல்கின்றனர்.அவர் கூறியதாவது: எங்கள் வீட்டின் அருகே அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. தினமும் எங்கள் வீட்டைக் கடந்து தான் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும். எனவே வெறும் கோலம் மட்டும் போடுவதை விட, அத்துடன் சில விழிப்புணர்வு வாசகங்களையும் எழுதுவோம் என்று தோன்றியது. இது மாணவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும் என எண்ணினேன். ஒவ்வொரு நாள் காலையிலும் மாணவர்கள் அந்த வாசகத்தை படித்துச் செல்வதை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் இதை தொடர ஆரம்பித்தேன். இதற்காக மாணவர்களுக்கு ஏற்ற புதிய தேடலையும் மேற்கொண்டேன். மனிதம் மரித்துப் போன இந்த உலகில் என்னுடைய இந்த முயற்சி ஒரு சிலரின் வாழ்க்கையிலாவது மாற்றத்தை ஏற்படுத்தினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். நிச்சயமாக அது நடைபெறும், என்றார். ஆசிரியர் கீதாவின் வண்ணக்கோலத்துடன் கூடிய விழிப்புணர்வு வாசகத்தை படிப்பதற்கென்று அவ்வழியாக மாணவர்கள் பலர் சென்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !