லஞ்சம் வாங்கிய பில் கலெக்டருக்கு 4 ஆண்டு
சிவகங்கை: வீட்டு வரி ரசீது வழங்குவதற்கு ரூ. 2000 லஞ்சம் வாங்கிய சிங்கம்புணரி பேரூராட்சி பில் கலெக்டருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார்.மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். சிங்கம்புணரியில் 2009 ல் வீடு கட்டினார். இந்த வீட்டிற்கு வீட்டு வரி ரசீது பெறுவதற்காக பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது அங்கிருந்த பில் கலெக்டர் தனபால் வீட்டு வரி ரசீது வழங்குவதற்கு லஞ்சமாக தனக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் பச்சையப்பன் என்பவருக்கும் சேர்த்து ரூ.2000 தர வேண்டும் என்று கூறினார்.லஞ்ச ஒழிப்பு போலீசில் கிருஷ்ணகுமார் புகார் செய்தார். அவர்கள் ஏற்பாட்டின் பேரில் 2009 ஜூலை 8 ஆம் தேதி தனபாலிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை கிருஷ்ணகுமார் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தனபாலை கைது செய்தனர். அவர் மீதும் பேரூராட்சி செயல் அலுவலர் பச்சையப்பன் மீதும் சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணையின் போது பச்சையப்பன் இறந்தார். தனபாலுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செந்தில் முரளி உத்தரவிட்டார்.