காரைக்குடி அருகே கட்டப்பட்ட சில நிமிடத்தில் இடிந்த பஸ் ஸ்டாப்
காரைக்குடி: காரைக்குடி நெசவாளர் காலனியில் பஸ் ஸ்டாப் கட்டுவதற்கான தளம் அமைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சரிந்து விழுந்தது. காரைக்குடி அருகேயுள்ள நெசவாளர் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பஸ் ஸ்டாப் கட்டும் பணி நடந்து வருகிறது. நெடுஞ்சாலையை ஒட்டி, துாண்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை, தளம் அமைக்கும் பணி நடந்தது. தளம் அமைத்து விட்டு,. பணியாளர்கள் அனைவரும் புறப்பட தயாரான நிலையில் பஸ் ஸ்டாப் தளம் சரிந்து கீழே விழுந்தது. தளத்தில் போடப்பட்டிருந்த கம்பிகள் வளைந்து, மொத்த சிமென்ட் கலவையும் கீழே கொட்டி வீணானது. அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் சிமென்ட், ஜல்லி கலவைகளை அள்ளும் பணியில் ஈடுபட்டனர். கமிஷனர் சங்கரன் கூறுகையில்: இதுவரை தகவல் எதுவும் வரவில்லை. அது கான்ட்ராக்டர்களின் பொறுப்பு. விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.