தொழில்நெறி விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஜூலை 9 முதல் 15 வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக பல்வேறு தொழில் நெறி வழிகாட்டல்மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.அவர் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் ஜூலை 2வது வாரம் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜூலை 9 அன்று மாற்றுத்திறனாளிகளுக்குகான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் திறன் பயிற்சி, சுய வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி,முன்னுரிமை பிரிவினைச் சார்ந்தோருக்கு மத்திய மாநில உள்ளாட்சி நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை மற்றும் அரசினால் வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.ஜூலை 10 அன்று மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், 10, பிளஸ் 2 வகுப்பு மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு மேல்படிப்பு மற்றும் அரசால் வழங்கப்படும் கல்விக்கான ஊக்கத்தொகை விவரங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. ஜூலை 11 அன்று பொறியியல் கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி போட்டித்தேர்வு குறித்தும், சுயவேலைவாய்ப்பு குறித்தும் விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது.ஜூலை 14 அன்று பள்ளி கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி. ஜூலை 15 அன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல், தொழில் பழகுநர் பயிற்சி, சுயவேலைவாய்ப்பு, ராணுவத்தில் வேலைவாய்ப்பு, அரசு, அரசு சாந்த நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு விழிப்புணர்வு அளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. மேலும் அன்று உலக இளைஞர் திறன் நாளாக கொண்டாட அன்றைய தினத்தில் திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வேலை தேடுபவர்களுக்கு நடத்தப்படவுள்ளது. தொழில்நெறி வழிகாட்டல் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் 04575 - -240 435 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு நிகழ்ச்சி குறித்த விவரங்களை அறிந்து பயன்பெறலாம் என்றார்.