எட்டு ஆண்டு பிரச்னைக்கு தீர்வு பயன்பாட்டிற்கு வந்த மயானம்
தேவகோட்டை: எட்டு ஆண்டு மயான பிரச்னைக்கு தீர்வு கிடைத்ததுடன் மயானம் செயல்பட துவங்கியது. தேவகோட்டையில் 2017ல் ராம்நகரில் நவீன எரிவாயு மயானம் கட்டப்பட்டது. சிலரின் எதிர்ப்பால் செயல்பட வில்லை. மீண்டும் இரு ஆண்டு கழித்து காஸ் சிலிண்டர் மூலம் எரிவாயு மயானமாக மாற்றப்பட்டது.ஆனாலும் செயல்பாட்டிற்கு வரவில்லை.நகராட்சி நிதி வீணாவதுபற்றியும், நகராட்சிக்கு வரவேண்டிய கட்டண வருமானம் பாதிப்பது குறித்து தினமலர் தொடர்ந்து சுட்டி காட்டியது. பல அமைப்புகள் போராட்டம் அறிவித்தன. ஒவ்வொருவருக்கும் ஒரு பதில் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள், போலீசாரின் குளறுபடியான அறிவிப்பு குறித்து தினமலர்நாளிதழில் ஜூன் 5ம் தேதி செய்தி வெளியிட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் செயல்முறை விளக்கம் அளித்தனர். தி.ஊரணி தெற்கு பகுதியைச் சேர்ந்த விருத்தகிரீசன் மனைவி சுப்பு லெட்சுமி 75, என்ற மூதாட்டி இறந்தார். அவரது உடல் எரிவாயு மயானம் கொண்டு வரப்பட்டு எரியூட்டப்பட்டது.