உள்ளூர் செய்திகள்

கழிவால் அடைப்பு

தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டத்தில் சிவகங்கை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்த நகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம் 2006 ஜூன் 12ல் ரூ.19.82 கோடிக்கு அனுமதி வழங்கியது. 3 தொகுப்பாக பிரித்து, 2007 மார்ச் 5ல் பணி துவங்கியது.திருத்திய மதிப்பீடு தொகை ரூ.23.40 கோடிக்கு 2009ல் நிர்வாக அனுமதி கிடைத்தது. குழாய் பதித்தல், சுத்திகரிப்பு நிலையம், வீடுகளுக்கு இணைப்பு என 3 கட்டங்களாகப் பணிகள் நடந்தன.பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு முத்துப்பட்டியில் தினமும் 49.2 லட்சம் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டது. கழிவு நீரை பம்பிங் செய்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்ப மருதுபாண்டியர் நகர், மானாமதுரை சாலை ஆகிய இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டன. தற்போது வீடுகளுக்கு பாதாள சாக்கடை குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசனி முத்துப்பட்டியில் தினமும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு பூங்காவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் நகராட்சியில் ஆங்காங்கே பாதாள சாக்கடை கழிவுநீர் நிரம்பி ஆள் நுழைவு குழி வழியாக வெளியேறி ரோட்டில் ஓடுகிறது.25 வது வார்டு அகிலாண்டாபுரம் சேக்கிழார் தெரு பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் முறையாக செல்வதில்லை அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு ரோட்டில் ஓடுகிறது. 26 வது வார்டு இந்திரா நகர் சோனையா கோவில் தெரு பகுதியிலும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கும் மேல் கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது.இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு காய்ச்சல் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து வெளியேறும் இந்த கழிவு நீரை மழைநீர் வடிகாலில் விடுகின்றனர். இந்த கழிவுநீர் அனைத்தும் தற்போது கீழ்பாத்தி கண்மாயில் கலக்கிறது.இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கண்மாயில் உள்ள மீன்கள் இறக்க வாய்ப்பு உள்ளது. 25,26 வது வார்டுகளில் செல்லக்கூடிய பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்து ரோட்டில் கழிவுநீர் ஓடாமல் இருக்கவும், கீழ்பாத்தி கண்மாயில் கலக்காமல் இருக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.மேலாளர் கென்னடி கூறுகையில், மானாமதுரை சாலையில் உள்ள பாதாளசாக்கடை பம்பிங் ஸ்டேஷனில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.மழைக்காலம் என்பதாலும் அடைப்பு ஏற்பட்டு அந்த பகுதியில் உள்ள மேன்ஹோலில் கழிவுநீர் வெளியேறுகிறது.இரண்டு தினங்களில் பம்பிங் ஸ்டேஷன் சுத்திகரிப்பு பணி முடிந்துவிடும். அதற்குபிறகு பாதாள சாக்கடையில் கழிவு நீர் முறையாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை