உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயிகள் மீது அக்கறை செலுத்தாத  அதிகாரிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் அதிருப்தி  

விவசாயிகள் மீது அக்கறை செலுத்தாத  அதிகாரிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் அதிருப்தி  

சிவகங்கை:விவசாய வளர்ச்சியில் வேளாண் அதிகாரிகள்அக்கறை செலுத்த வேண்டும். மின்வாரியம் சார்ந்த புகார் அதிகளவில் வருவதை தடுக்க மேற்பார்வை பொறியாளர் முன் வர வேண்டும் என சிவகங்கையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் கண்டிப்புடன் தெரிவித்தார். சிவகங்கை கலெக்டர்அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். கோட்டாட்சியர் விஜயகுமார், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், கலெக்டர் பி.ஏ.,(வேளாண்மை) தனலட்சுமி பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்: விஸ்வநாதன், (மார்க்சிஸ்ட்), சிவகங்கை: மல்லாக்கோட்டை குவாரி விபத்து தொடர்பாக அனைத்து துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்து நேரிடா வண்ணம், கிராவல் குவாரி, கிரஷர் குவாரியை கண்காணிக்க வேண்டும். கலெக்டர்: மல்லாக்கோட்டை குவாரி விபத்து விஷயத்தில் நடவடிக்கை எடுத்து, அபராதமும் விதித்து விட்டோம். இனி வரும் காலங்களில் அனைத்து குவாரிகளும் கண்காணிக்கப்படும். போஸ், புல்லுக்கோட்டை: மறவமங்கலம் தொடக் கூட்டுறவு கடன் சங்கத்தில்106 பேர்களுக்கு ஆடு வளர்ப்பதற்கான கடன் வழங்கப்படாமல் உள்ளது. கன்னியப்பன், இளையான்குடி: இளையான்குடி ஒன்றியம், கீழாயூர், மேலாயூர் கண்மாய் முறையாக துார்வாரமல் மடைகள் மேடாகி விட்டன. கலெக்டர்: விவசாயிகள் தெரிவிக்கும் புகார்களுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு, வேளாண்மை அதிகாரிகளுக்கு உண்டு என்பதை அறிந்து பணியாற்ற வேண்டும். மேலும் விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு பெற்று தருவதில், வேளாண்மை அதிகாரிகள் அக்கறை காட்ட வேண்டும். அய்யாச்சாமி, மேலநெட்டூர்: கோடை விவசாயம் மூலம் நெல் அறுவடை செய்து காத்திருக்கின்றனர். நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். கலெக்டர் : ஏற்கனவே கோடை நெற் பயிர் கொள்முதல் செய்ய திருமாஞ்சோலை, நெல்முடிக்கரையில் நிலையம் உள்ளது. இன்னும் வேண்டும் என விவசாயிகள் எழுதி கொடுத்தால் திறக்கப்படும். ராஜா, திருப்புவனம்: மடப்புரத்தில் ரூ.2 கோடி செலவில் கடைகள் கட்டி திறக்கப்பட்டுவிட்டன. ஆனால், ஒரு கடை கூட அங்கு செயல்படாமல் கோயில் பகுதி கடைகளால் நெரிசல் ஏற்படுகிறது. முருகேசன், திருப்புவனம்: திருப்புவனம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதை சீர்செய்ய, மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. 2019ல் ஆழ்குழாய் கிணறு தோண்டி மானியமும், மின் இணைப்பும் வழங்கவில்லை. ஆனால், வங்கியில் வட்டியுடன் செலுத்தி வருகிறேன். கலெக்டர் : மாவட்டத்தில்அதிகளவில் மின்வாரியத்தின் மீதே புகார்கள்வருகின்றன. சரியாக வேலை செய்யாத அலுவலர், ஊழியர் மீது மின் மேற்பார்வை பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிமூலம், விவசாய சங்கம், திருப்புவனம்: விவசாய தேவைக்கு வண்டல் மண் எடுத்து கொள்ள அனுமதிக்க வேண்டும். கலெக்டர்: விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அந்தந்த தாசில்தாரிடம் ஆன்லைனில் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம். அய்யாச்சாமி, மானாமதுரை: மானாமதுரை அருகே முத்தனேந்தல், மணலுார் வழியாக செல்லும் பஸ்கள், சர்வீஸ் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதில்லை. தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி இறக்குவதால், ரோட்டை கடக்கும் போது ஏற்படும் விபத்தால் இது வரை 12 பேர் வரை இறந்துள்ளனர். கலெக்டர்: இது குறித்து போக்குவரத்து ஆய்வு கூட்டத்தில் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை