சிவகங்கையில் ஆட்சி மொழி சட்ட வாரம் கடைபிடிப்பு கலெக்டர் தகவல்
சிவகங்கை: சிவகங்கையில் டிச., 18 முதல் 27 ம் தேதி வரை ஆட்சி மொழி சட்ட வாரம் கடைபிடிக்கப்படுகிறது என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இந்நிகழ்வில் அரசு ஊழியர்களுக்கு கணினி தமிழ்,ஆட்சி மொழி சட்ட வரலாறு,அரசு உத்தரவு,சுற்றறிக்கை குறிப்பு, செயல்முறை ஆணை,அரசு அலுவலகங்களில் பெயர் பலகை அமைத்தல் ஆகிய தலைப்புகளில் பேராசிரியர்கள்,தமிழ் வல்லுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகளை உரிய விகிதப்படி தமிழ், ஆங்கிலம், பிற மொழிகளில் அமைத்திட வலியுறுத்தப்படும்.வணிக நிறுவனத்தினர், தொழிலாளர் துறை அலுவலர்களுடன் பங்கேற்கும் பட்டிமன்றம், ஆட்சி மொழி சட்டத்தை அறிய செய்யும் விதத்தில் விளம்பர பதாகைகள் ஏந்தி விளக்க கூட்டம் நடத்தப்படும். அரசு ஊழியர், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்பினர் பள்ளி, கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து தமிழ் சார்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆட்சி மொழி தொடர்பான பதாகை ஏந்தி விழிப்புணர்வு ஊர்வலம் டிச., 24 ல் நடத்தப்படும்.இந்நிகழ்வுகளில் அரசு ஊழியர், தமிழறிஞர்கள், மாணவர்கள் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும், என்றார்.