கச்சாத்தநல்லுாரில் ஆழ்துளை கிணறுக்கு எதிர்ப்பு கலெக்டர் அலுவலகம் முற்றுகை
சிவகங்கை: இளையான்குடி அருகே காச்சாத்த நல்லுார் வைகை ஆற்றிற்குள் உறைகிணறு அமைக்க கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இளையான்குடி பகுதி மக்களுக்கு குடிநீர் எடுத்து செல்ல கச்சாத்தநல்லுார் வைகை ஆற்றிற்குள் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் எடுத்து செல்லும் ரூ.28 கோடி மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இதற்காக கச்சாத்த நல்லுார் வைகை ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்தால் அப்பகுதி விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும். இத்திட்டத்தை கைவிட்டு, கச்சாத்த நல்லுாருக்கு 5 கி.மீ., தொலைவில் இத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து கச்சாத்தநல்லுார் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் பொது குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் பி.ஏ.,(பொது)முத்து கழுவனிடம் மனு அளித்தனர். கிராம மக்களிடம் சிவகங்கை கோட்டாட்சி யர் ஜெபி கிரேசியா, இளையான்குடி தாசில்தார் முருகன், துணை தாசில்தார் மேரி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி, மனுவை கலெக்டரின் பார்வைக்கு கொண்டு செல் வதாக தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.