சிங்கம்புணரியில் பஸ் வசதி இல்லாமல் தவிக்கும் பயணிகள்
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் இருந்து தலைநகர் சென்னைக்கு சென்று வர போதிய அரசு பஸ் இல்லாமல் பயணிகள் தவிக்கின்றனர்.இப்பேரூராட்சி மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து தினமும் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு காரணங்களுக்காக சென்னை சென்று வருகின்றனர். இங்கிருந்து பத்துக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்படும் நிலையில், அரசுப் பேருந்து ஒன்று மட்டுமே இயக்கப்படுகிறது.பல நேரங்களில் தனியார், அரசு பஸ்களில் இடம் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அல்லது திருச்சி சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் செல்ல வேண்டியுள்ளது. சீசன் நேரங்களில் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் அவதிப்படுகின்றனர். பெயருக்கு ஒரு பேருந்து மட்டும் அரசு சார்பில் இயக்கப்படுகிறது.15 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் இருந்து மூன்று அரசு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தும், பேருந்து குறைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவில்லை. எனவே மக்கள் நலன் கருதி சிங்கம்புணரியில் இருந்து சென்னைக்கு கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும்.