உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளைஞர்களின் பெயரில் கடன் மோசடி தி.மு.க., நிர்வாகிகள் மீது புகார்

இளைஞர்களின் பெயரில் கடன் மோசடி தி.மு.க., நிர்வாகிகள் மீது புகார்

இளையான்குடி: இளையான்குடி அருகே கிராம இளைஞர்களிடம் தி.மு.க., மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினராக சேர்ப்பதாக கூறி ஆவணங்களை பெற்று தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இளையான்குடி அருகே உள்ள வலையனேந்தல்,கரும்புகூட்டம்,கருஞ்சுத்தி, குமாரகுறிச்சி,தெற்குகீரனுார் உள்ளிட்ட கிராம இளைஞர்களிடம் தி.மு.க.,வைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் 2 வருடங்களுக்கு முன்பு தி.மு.க., மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினராக சேர்ப்பதாக கூறி ஆவணங்களை பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இளையான்குடி கிளையில் அவர்களது பெயரில் கடன் பெற்று தற்போது வரை தவணை செலுத்தாமல் இருந்துள்ளனர். வங்கியை சேர்ந்த அதிகாரிகள் கடன் பெற கொடுத்த ஆவணங்களின்படி இளைஞர்களின் வீடுகளுக்கு சென்று கடனை திரும்ப செலுத்துமாறு கேட்டபோது அவர்களது பெயரில் கடன் வாங்கி மோசடி நடைபெற்றது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் கூறியதாவது: எங்களது பிள்ளைகளிடம் தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கட்சியில் சேர்த்து கூட்டுறவு வங்கிகளில் நடைபெறும் கூட்டுறவு தேர்தல்களில் போட்டியிட ஏதுவாக உறுப்பினராக சேர்ப்பதாக கூறி ஆவணங்களை வாங்கி முறைகேடாக கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டுறவு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி திருப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறியதாவது: இளையான்குடி கிராம பகுதிகளில் உள்ள இளைஞர்களின் ஆவணங்களை கொண்டு மோசடி நடைபெற்றது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கடன் தொகை வசூலிக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ