சிவகங்கையில் மின்சாரம் தாக்கிய சிறுவர்களுக்கு சிகிச்சை தாமதம் அரசு மருத்துவமனை மீது புகார்
சிவகங்கை: சிவகங்கை அருகே மின்சாரம் தாக்கி சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு வந்த சிறுவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிகிச்சை அளிக்காமல் தாமதம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை அருகே செங்குளத்தை சேர்ந்த 10வயது சிறுவன், 14 வயது சிறுவன் இருவரும், செங்குளத்தில் உள்ள வீட்டு மாடியில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்கு அருகே சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில், இரு சிறுவர்களும் கீழே விழுந்தனர். காயத்துடன் இருந்த அவர்களை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில்காயத்துடன் வந்த சிறுவர்களுக்கு அங்கிருந்த டாக்டர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிகிச்சை அளிக்காமல் இருந்ததாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். அவசர சிகிச்சை பிரிவு டாக்டர்கள், சிறுவர்களின் பெற்றோர்களை அழைத்து, சிறுவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருவதாக, எழுதி வாங்கி கொண்டதாகவும் தெரிவித்தனர்.