உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை நகராட்சியில் வளர்ச்சிப்பணி பணம் தர மறுப்பதாக கலெக்டரிடம் புகார்  

சிவகங்கை நகராட்சியில் வளர்ச்சிப்பணி பணம் தர மறுப்பதாக கலெக்டரிடம் புகார்  

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் வேலை உத்தரவு வழங்காமல் பணி முடித்த நிலையில் அதற்குரிய பணத்தை பெற முடியாமல் ஒப்பந்ததாரர்கள் தவிக்கின்றனர். சிவகங்கை நகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு, கலெக்டர் அலுவலக வளாக நகராட்சி பூங்காவில் கோடை விழா நடத்தியது, தமிழக அரசின் 4 ஆண்டு சாதனையை விளக்க பொது இடங்களில் எல்.இ.டி., திரை அமைத்தது, பட்ஜெட் விளக்க கூட்ட விளம்பர திரை அமைத்தது, நகராட்சி மற்றும் முக்கிய இடங்களில் தமிழ் வாழ்க டிஜிட்டல் போர்டு வைத்தது, பூங்காவில் எலக்ட்ரிக் பணிகளை செய்தது என இந்நகராட்சியில் ஒப்பந்ததாரர்கள் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பணிகளை செய்துள்ளனர். இந்த பணி செய்வதற்கான உத்தரவு நகலை வழங்காமல், பணியை செய்யுங்கள் பில் தொகை தரும்போது, பணி நகல் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை நம்பி பல ஒப்பந்ததாரர்கள் சிவகங்கையில் பல்வேறு பணிகளை செய்துள்ளனர். பணிகளை முடித்து பல மாதங்களான நிலையில் ஒப்பந்ததாரர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் பணத்தை அனுமதிக்க மறுப்பதாக கலெக்டர் பொற்கொடியிடம் புகார் அளித்துள்ளனர். அரசு பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு முதலில், பணிக்கான அனுமதி கடிதத்தை வழங்கிய பின்னரே, பணியை துவக்க வேண்டும். ஆனால், சிவகங்கை நகராட்சியில் விதிகளை மீறி பணிக்கான அனுமதி கடிதமே கொடுக்காமல், வாய்மொழி தகவலை வைத்து பணிகளை செய்ய, நகராட்சி அதிகாரிகள் ஏன் அனுமதித்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம் கூறியதாவது: முடிந்த பணிகளுக்கான பில் தொகையை விடுவிக்க, பொறியியல் பிரிவில் இருந்து எனக்கு ஆவணங்கள் வரவில்லை. ஆவணங்கள் வந்ததும், நிதி அனுமதிக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி