மகளிர் பேருந்தில் கட்டணம் வசூலித்த நடத்துனர் நீக்கம்
சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மகளிர் இலவச பேருந்தில் டிக்கெட்டிற்கு பணம் வசூலித்த நடத்துனர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு பஸ் டிப்போவில் இருந்து டிச., 3 மாலை, சிங்கம்புணரி வந்த அரசு மகளிர் கட்டணமில்லா டவுன் பஸ்சில் பெண் பயணிகளிடம் கண்டக்டர் டிக்கெட்டிற்கு பணம் வசூலித்தார். சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் இறங்கிய இரு பெண்கள், அது மகளிர் கட்டணமில்லா பஸ் என்பதை தெரிந்து கொண்டனர். எதற்காக டிக்கெட்டிற்கு பணம் வாங்கினீர்கள் என்று கண்டக்டரிடம் கேட்டனர். கண்டக்டரும், டிரைவரும் முறையான பதில் சொல்லாமல் பஸ்சை எடுத்து மீண்டும் நத்தத்திற்கு சென்று விட்டனர்.இதுகுறித்து நத்தம் டிப்போ மேலாளருக்கு புகார் அனுப்பப்பட்டது. இந்நிலையில் கட்டணமில்லா பேருந்தில் டிக்கெட் வசூலித்த கண்டக்டர் வேல்முருகன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.நத்தம் டிப்போ மேலாளர் ஆனந்தன் தெரிவித்ததாவது: மகளிருக்காக இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் டிக்கெட் மட்டும் கொடுக்கப்படும், பணம் வசூலிப்பதில்லை. ஆனால் ஒப்பந்த ஊதியத்தில் பணிபுரியும் நடத்துனர் வேல்முருகன் விதியை மீறி பெண்களிடம் டிக்கெட்டிற்கு பணம் வசூலித்துள்ளார். இது பற்றிய புகார் எங்கள் கவனத்திற்கு வந்த நிலையில் வேல்முருகனை பணி நீக்கம் செய்துள்ளோம் என்றார்.