உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  எஸ்.ஐ.ஆர்., படிவ பதிவில் குழப்பம் தி.மு.க., செயலாளருக்கு நோட்டீஸ் அதிகாரிகளை கண்டித்து மறியல்

 எஸ்.ஐ.ஆர்., படிவ பதிவில் குழப்பம் தி.மு.க., செயலாளருக்கு நோட்டீஸ் அதிகாரிகளை கண்டித்து மறியல்

தேவகோட்டை: தேவகோட்டையில் எஸ்.ஐ.ஆர்., படிவம் பதிவில் முழு விவரம் இல்லாததால் தி.மு.க., கவுன்சிலர் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப தயாரானதை அறிந்த அவர் கட்சியினருடன் சாலை மறியலில் ஈடுபட்டார். தேவகோட்டை தி.மு.க. நகர செயலாளர் பாலமுருகன் கவுன்சிலராக உள்ளார். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில் எஸ்.ஐ.ஆர். படிவம் வழங்கி சிலருக்கு பதிவில் முழு விவரம் இல்லாததால் ஆவணங்களுடன் ஜன.,4ல் ஆஜராக கூறி நோட்டீஸ் தயார் செய்தனர். பாலமுருகன் வழங்கிய எஸ்.ஐ.ஆர்., திருத்த படிவத்தில் வாக்களித்த விபரம், வீட்டில் வாக்களித்த உறவினர் பெயர் குறிப்பிடாததால் ஆவணங்களுடன் ஜன. 4 ல் நகராட்சி கமிஷனர் முன் ஆஜராகி விளக்கம் தர நோட்டீஸ் தயாரானது. பாலமுருகனுக்கு வழங்கப்படாத நிலையில் நோட்டீஸ் விபரம் அவருக்கு தெரிய வந்தது . உதவி தேர்தல் அலுவலர் நேரில் வர வேண்டும் என வலியுறுத்தி நகர செயலாளர் பாலமுருகன் கட்சியினருடன் நகராட்சி முன் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பாலமுருகன் கூறுகையில், எஸ்.ஐ.ஆர்.படிவங்கள் வழங்கிய போது எனது வார்டில் யாருக்கும் பெயர் விட்டு விடக் கூடாது என விண்ணப்பங்களை வாங்கி ஆய்வு செய்து கொடுத்தேன். இப்போது எனக்கு நோட்டீஸ் பற்றிய தகவல் கிடைத்தது. 4 ம் தேதி ஆஜராக வேண்டிய நிலையில் எனக்கு நோட்டீஸ் தரவில்லை. நோட்டீஸ் அப்படியே வைத்து இருந்து பதில் வரவில்லை என கூறி வாக்காளர் பட்டியலில் என் பெயரை நீக்க சதி நடக்கிறது. எஸ்.ஐ. ஆர்.தொடர்பாக சப் கலெக்டரிடம் அடிக்கடி வாதம் செய்ததால் நடந்திருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளது என்றார். அலுவலகத்தில் விசாரித்த போது அடுத்தடுத்து இரண்டு பாலமுருகன் இருந்துள்ளது. இரட்டை பதிவு என கருதி நீக்கிய போது தவறு நடந்து மீண்டும் சேர்க்கப்பட்டு விட்டதாக கூறினர். மறியலை தொடர்ந்து சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் பாலமுருகன் பெயரை சேர்க்க தகுதி இருப்பதாகவும் பிப்ரவரியில் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !