| ADDED : நவ 27, 2025 06:56 AM
சிவகங்கை: சங்கங்களுக்கு அங்கீகார தேர்தலை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் சுமைதுாக்குவோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் சிவகங்கை, இளையான்குடி, சிலுக்கப்பட்டி, திருமாஞ்சோலை, திருப்புத்துார், தேவகோட்டை, மானாமதுரை, காரைக்குடி, சிங்கம்புணரி ஆகிய இடங்களில் கோடவுன் உள்ளது. இங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்படும். இது தவிர அரவை மில்களில் அரைக்கப்படும் அரிசி மூடைகள் கோடவுன்களில் அடுக்கி வைக்கப்படுகின்றன. இதற்காக அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவற்றை ஏற்றி, இறக்க அனைத்து கோடவுன்களில் சுமை துாக்குவோர் 129 பேர் வரை பணிபுரிகின்றனர். இவர்கள் நேற்று ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டிய ஆயிரம் டன் ரேஷன் பொருட்கள் கோடவுனில் தேங்கியது. வேலை நிறுத்தத்திற்கு டி.என்.சி.எஸ்.சி., மாநில சுமைதுாக்குவோர் பாதுகாப்பு சங்க மாநில துணை தலைவர் தனபால் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாண்டி, செயலாளர் பெரியசாமி உட்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு 5 ஆண்டிற்கு ஒரு முறை சங்க தேர்தலை நடத்த வேண்டும். அதே போன்று வருகை பதிவேட்டில் தற்காலிக ஊழியர்களின் பெயர்களை ஏற்ற வேண்டும். பணியில் சேர்ந்து ஒரு ஆண்டு ஆன சுமைதுாக்குவோருக்கு பிங்க் கலர் பட்டையும், 10 ஆண்டுக்கு மேல் பணிவோருக்கு பச்சை நிற பட்டையும் வழங்க வேண்டும். ஆனால், இக்கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.