கலந்தாய்வு முறையில் பதவி உயர்வு வலியுறுத்தி அக். 7ல் போராட்டம் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் முடிவு
சிவகங்கை:'பதவி உயர்வு வழங்குவதில் வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்த கலந்தாய்வு முறையை பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 7ல் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,' என, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது. சிவகங்கையில் இதுகுறித்து சங்க மாநில பொதுச் செயலாளர் நவநீத கிருஷ்ணன் கூறியதாவது: தனியார் தொழில் முனைவோர் நடத்தும் முதல்வர் மருந்து கடைகளில் விற்பனையை அதிகரிக்க கூட்டுறவு சார் பதிவாளர்களை அரசு நிர்பந்தம் செய்வதை தவிர்த்திட வேண்டும். பதிவறை எழுத்தர் நிலை முதல் துணைப்பதிவாளர் வரையிலான பதவி உயர்வுகளில் வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்த கலந்தாய்வு முறையை பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூட்டுறவு சார் பதிவாளர் நிலையிலிருந்து துணைப்பதிவாளர் நிலைக்கு பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்ட பின்னரும் இதுவரை வெளியிடப்படாமல் உள்ள பணி நியமன ஆணையை வெளியிட வேண்டும். கூட்டுறவு பணியாளர் சிக்கன மற்றும் நாணய சங்கங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் 20 கோடிக்கு மேல் கடன் நிலுவையிலுள்ள சங்கங்களுக்கு மேலாண்மை இயக்குநர் பணியிடத்தை உருவாக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மீதான வழக்குகளுக்கு முறையாக பதில் மனுக்கள் தாக்கல் செய்ய மதுரை, சென்னை உயர்நீதிமன்றங்களில் தொடர் நடவடிக்கை அலுவலர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும். மாலை 6:00 மணிக்கு மேல் கூகுள் மீட் கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். கவுன்சிலிங் முறையை கட்டாயம் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 7ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.